ஆன்லைன் செல்லாமல் பலர் க்யூவில் நின்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதேன்

கோப்புப் படம்

ஸ்மார்ட் போன், 24*7 வைஃபை வசதி, மொபைல் மூலமே பணம் செலுத்தும் வசதி என தொழில்நுட்பம் பல வசதிகளை அளித்தாலும், இன்றும் சுமார் 35 சதவிகித ரயில் டிக்கெட்டுகள், ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் மூலமே பதிவுசெய்யப்படுகின்றன. இருந்த இடத்திலிருந்து முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி தளம் பல வசதிகளை அளித்தாலும், பயணிகள் ஏன் ரயில் நிலையங்களில் க்யூக்களில் காத்திருந்து முன்பதிவு செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள, சதர்ன் ரயில்வே ஒரு சர்வே நடத்தியது. சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வே, சில ஆச்சர்யத் தகவல்களை அளித்திருக்கிறது.

1) பலர் நினைப்பதுபோல, சீனியர் சிட்டிசன்கள் மட்டும் ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்வதில்லை. 21 முதல் 45 வயதுக்குட்பட்டோர்தான் அதிக அளவில் (அதாவது மூன்றில் இரண்டு பங்கினர்) ரயில் நிலையங்களுக்கு முன்பதிவு செய்ய வருகின்றனர். 

2) ரயில் நிலைய முன்பதிவில், காகித டிக்கெட் கையில் வழங்கப்படும். ஒருவேளை டிக்கெட் கடைசி வரை வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டாகவே இருப்பின், அந்த டிக்கெட்டை ‘ஓப்பன் டிக்கெட்டாக’க்கொண்டு, அன்ரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்கலாம். ஆனால், அதுவே ஈ-டிக்கெட் என்றால், அது தானாகவே ரத்தாகிவிடும். பயணத்தின் கடைசி நிமிடத்தில் ஓப்பன் டிக்கெட் பெறவேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

3) நெட் பேங்கிங், மொபைல் வாலட் போன்ற பல கட்டண வசதிகள் பெருகியிருந்தாலும், கையிலிருந்து பணமாகக் கொடுத்து டிக்கெட் பெறவும் பலர் விரும்புகின்றனர். அதற்கு பேங்கிங் கட்டணம், பெஃய்லியர் டிரான்சாக்‌ஷன் போன்றவைகளும் காரணங்களாகும்.

4) சர்வேயில் பங்கெடுத்தவர்களில் 61 சதவிகிதத்தினர் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன் வைத்திருந்தாலும், நேரில் சென்று டிக்கெட் பெறவே விரும்புகின்றனர். ரயில் நிலையங்களுக்குச் செல்வது பழக்கமாகிவிட்டது ஒரு காரணம். பெரும்பாலான சமயங்களில் அரை மணி நேரத்துக்குள் வேலை முடிந்துவிடுவது இன்னொரு காரணம் என்கின்றனர்.      

இந்த சர்வே முடிவுகளைக்கொண்டு, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.