Tamilnadu people lost peace from swathi murder case to Ops Resignationசுவாதி கொலை முதல் ஓ.பன்னீீர்செல்வம் ராஜினாமா வரை... கதறும் தமிழன்! | Tamilnadu people lost peace from swathi murder case to Ops Resignation

சுவாதி கொலை முதல் ஓ.பன்னீீர்செல்வம் ராஜினாமா வரை... கதறும் தமிழன்! | Tamilnadu people lost peace from swathi murder case to Ops Resignation

2016 சட்டமன்றத்  தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த சமயம் அது. அதிமுக அறுதிப்  பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பது உறுதியான சூழ்நிலையில், அத்தனை பொருளாதார அறிஞர்களும் இப்படிச் சொன்னார்கள் "எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு ஆட்சி, இரண்டாவது முறையாக  தொடர்கிறது, சட்டமன்றத்தில்  தனிப்பெரும்பான்மையும் இருக்கிறது, அரசு தைரியமாக  கொள்கை முடிவுகளை எடுக்க முடியும், வேலைவாய்ப்புகளை  பெருக்கலாம், முதலீடுகளை குவிக்கலாம்"  எனப் பாசிட்டிவாக பேசினார்கள். முந்தைய ஆட்சிக் காலத்தைப் போல எதற்கெடுத்தாலும் திமுகவை காரணம் காட்டி பிரச்னையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதால் அதிமுகவுக்கு, தொடர் வெற்றியே ஒரு மறைமுக நெருக்கடி தரும். இதனால், இம்முறை வளர்ச்சி இருக்கும், கொலை, கொள்ளை சம்பவங்கள் குறையும்  என நம்பினான் தமிழன். இதோ ஒன்பது மாதங்கள் முடிந்துவிட்டது, ஜெ முதல் ஓ.பன்னீீர்செல்வம் ஆட்சி வரை என்ன நடந்தது தமிழகத்தில்? 

 ஓ.பன்னீீர் செல்வம்

ஜெயலலிதா பதவியேற்றதில்  இருந்து இதோ இந்த நொடி வரை, இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரேக்கிங் நியூஸ்களால் திக்கித் திணறிக்கொண்டிருக்கிறது தமிழகம். எந்த நொடி, என்ன நடக்கும், யார் எந்த  குண்டைத் தூக்கி போடுவார்கள் என தெரியாமல் ஆடிப்போயிருக்கிறார்கள் நம் மக்கள். அரசியல்வாதிகளோடு சேர்ந்து மத்திய, மாநில அரசுகளும் மக்களின் நிம்மதியை குலைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சுய லாபத்துக்காக சிலர் ஆடும் ஆட்டத்தால் உரிமையை வேண்டி போராட வேண்டிய மக்கள், அன்றைய பொழுது நிம்மதியாய் கழிந்தால் போதும் சாமி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?

மக்களை கொதிநிலையிலேயே வைத்திருந்த சம்பவங்கள் என்னென்ன? 

மே இறுதியில், ஜெயலலிதா பதவியேற்க, ஒரே மாதத்தில் மக்களிடம் பெரும் வெறுப்பைச் சம்பாதித்தது அரசு. கடந்த ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி சென்னையில் நடந்த அந்தக் கொடூர கொலை தமிழத்தையே உறைய வைத்தது. சென்னை  நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் காலை வேளையில் ஒரு பெண்ணின் வாயில் வெட்டி, கழுத்தை அறுத்து பதறவைக்கும் ஒரு கொலையைச் செய்து விட்டு எவர் கண்ணிலும் படாமல் ஓடுகிறார் ஒரு மர்ம கொலை காரன். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என கெத்து காண்பித்த சென்னை, அன்றைக்கு தலைகுனிந்தது. முறையான சி.சி.டி வி கேமரா பதிவு கூட இல்லாமல் சுவாதி கொலையில் குற்றவாளியை பிடிக்கத் திணறியது தமிழக போலீஸ். 

சுவாதி கொலை

நாட்கள் மூன்று நகர்ந்தன, "தமிழகத்தில் இப்படியொரு கொலையா? அதுவும் காலை வேளையிலேயே, மக்கள் நடமாட்டம் மிக்க  பகுதியில், ஒரு பெண்ணை கொன்று, கூறு போட்டிருக்கிறார்கள், ஒரு பெண் ஆளும் மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கே இந்த கதியா"  என புலம்பிக் கொண்டிருந்த மக்கள், போலீஸ் இன்னமும் கொலை செய்த   குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என அறிந்ததும் சினம் கொண்டார்கள். சமூக வலைதளங்களில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதை அறிந்த ஜெ, கொலையாளியை கண்டுபிடிக்க   காவல்துறையை  முடுக்கிவிட்டார். 

சம்பவம் நடந்து ஏழு நாட்களுக்கு பிறகு, அதாவது ஜூலை ஒன்றாம் தேதி இரவு பத்து மணியளவில்  நெல்லை மாவட்டத்தைச்  சேர்ந்த மீனாட்சிபுரத்தில் ராம் குமார் என்பவரை பிடித்ததாகவும், அவர் தான் கொலை செய்த குற்றவாளி என்றும், போலீஸ் வருவதை அறிந்த ராம்குமார் பிளேடால் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும்  தகவல் சொன்னது தமிழ்நாடு போலீஸ். ராம்குமார் கழுத்து அறுக்கப்பட்ட புகைப்படங்களையும் போலீஸே கசிய விட்டது.  

கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார்

அதன் பிறகு ஆன்லைனிலும் சரி, ஆஃப்லைனிலும் சரி சுவாதி கொலை  வழக்கில் தொடர்புடைய  ராம்குமார் பற்றியப் பேச்சு தான்.  குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஒருவேளை ராம்குமார்  தான் கொலை செய்த குற்றவாளி என்றால் அதனை போலீசார் நிரூபிக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன. ராம் குமார் பற்றிய பரபரப்புகள் லேசாக குறைந்த சமயத்தில்  காவேரி பிரச்னை தமிழகத்தில் தலைவிரித்தாடியது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காமல், தண்ணீர் தராமல் தமிழகத்தை வஞ்சித்தது கர்நாடகா. சமூக வலைதளத்தில் ஒரு மீமுக்காக, கர்நாடகாவில் ஒரு தமிழன் அடிக்கப்பட,  இரண்டு மாநிலமும் கொதி நிலைக்கு வந்தது.  செப்டம்பர் 12 ஆம் தேதி கர்நாடகத்தில் சில அமைப்பினர் செய்த அராஜகங்களால் தமிழகத்தை சேர்ந்த ஒரு தனியார் பஸ் உரிமையாளரின் 41 பஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டன, ஒரு சில இடங்களில் தமிழக ஓட்டுனர்களை, கன்னட அமைப்பினர் சூழ்ந்து கொண்டு அவமானப்படுத்திய நிகழ்வு நடந்தது.

கர்நாடகாவின் காவிரி கலவரம்

இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த பதற்ற நிலையால், தேசிய ஊடகங்கள் தமிழகம்  கவனத்தை திருப்பின, தமிழக இளைஞர்கள் இங்கே வாழும் கன்னட மக்களுக்கு பாதுகாப்பாக நின்றனர், ஆங்காங்கே நடந்த வெகு சில சம்பவங்களைத் தவிர கன்னடர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாகவே இருந்தது தமிழகம். காவேரி பிரச்னை முழு வீரியம் எடுக்க ஆரம்பித்திருந்த சமயம் அது, செப்டம்பர் 18 ஆம் தேதி ராம்குமார், சிறையில் மின்சார  கம்பியை கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிவித்தனர். நீதிமன்றத்தில் கொலை செய்த குற்றவாளி ராம்குமார் தான் என போலீசார் நிரூபிக்கும் முன்பே நடந்த தற்கொலை பல சந்தேகங்களை கிளப்பியது, நிறைய பேர் அது போலீசாரின் நாடகம் என விமர்சித்தார்கள். ராம் குமார் தற்கொலை செய்யவில்லை என கண்ணீர் விட்டார் அவரது அப்பா, போலீஸ் தற்கொலை என ஜோடிப்பதாக குற்றம் சாட்டினார் 

உடனே  காவேரி  பிரச்னையை மறந்து  ராம் குமார்  பக்கம் திரும்பினான் தமிழன். இதெல்லாம் வெறும் நான்கு நாட்களுக்குத்தான். பின்னர் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட  ராம் குமாரையும் மறந்துவிட்டார்கள்.

 செப்டம்பர் 22 ஆம் தேதி இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கோவையில் கொலை செய்யப்பட, கோவையே பதற்றமானது. அதே தினம், இரவு பத்து மணியளவில்  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அப்போலோ  மருத்துவமனையில் சேர்க்கப்பட, ஒட்டுமொத்தத் தமிழகமும் அதிர்ந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மறுநாள் கோவையில் பயங்கர கலவரம் நடத்தியது இந்து முன்னணி. இஸ்லாமியர்கள் கடைகள், வாகனங்கள் மீது குறிவைத்து தாக்கியது இந்து முன்னணி. மசூதிகள், தேவலையங்கள் தாக்கப்பட்டன, கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது . பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் மீது கல்வீச்சு நடந்தது. போலீசார் வாகனம் எரிக்கப்பட்டது. வெறியாட்டம் நடத்திய கலவர காரர்களை தமிழக போலீஸ் லேசான தடியடி நடத்தி கலைக்க முற்பட்டது.   1998 கலவரம் போல மீண்டும் ஏதேனும் நடக்குமோ என கோவை மக்கள் கடும் அச்சத்தில் இருக்க, கார்டன் கண்ணசைவுக்கு பின்னர் கலவரம் தீவிரமாவதை தடுத்து நிறுத்தியது கோவை போலீஸ். சசிகுமாரை கொலை செய்த கொலை யாளிகளை கண்டுபிடிப்பதாக உறுதி தந்தது போலீஸ் 

கோவை கலவரம்

கோவை கலவரம் கோவையைத் தவிர மற்ற இடங்களில் பெரியளவில் பேசப்படுவதற்கு பதிலாக,  ஜெயலலிதா உடல்நிலை பரபரப்புகளால் தொடர்ந்து  இரண்டு வாரங்கள் ஒருவித இறுக்கமான சூழ்நிலையில் இருந்தது தமிழகம். விநாயகர் சதுர்த்தி, தீபாவளி என  அடுத்த மூன்று வாரங்கள் பண்டிகை கொண்டாட்ட மனநிலையில் நகர, நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி இரவு சுமார் 8.15 மணிக்கு தோன்றி ஒரு பெரிய ஷாக் தந்தார். ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, அதே சமயம் வேறு பணமும் வங்கிக் கிளைகளில் கிடைக்காது, ஏ.டி.எம்மிலும் பணம் இல்லை, உள்ளூரிலும்  சில்லறை தட்டுப்பாடு என  நிலைமை மோசமாக  நரக வேதனை அனுபவித்தார்கள் இந்தியர்கள். இதில் தமிழர்களும் தப்பவில்லை. மோசமான இத்தகைய தருணங்களில்  நாளொரு அறிவிப்பை வெளியிட்டு, மக்களை  குழப்பி நோகடித்தது மத்திய அரசு.

demonitization

டீமானிட்டைசேஷன் எனச் சொல்லப்படும் பண மதிப்பு நீக்க முறையால் மக்கள் சிரமப்பட, பி.ஜே.பியைச் சேந்த பலரிடமும், சில தொழிலதிபர்களிடமும் கத்தை கத்தையாக, கோடி கோடியாக இரண்டாயிரம் நோட்டுகள் பளபளத்தன. மத்திய அரசின் மீது மக்கள் கடுப்பில் இருந்த சமயத்தில், டிசம்பர் ஒன்றாம் தேதி கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவர திமுக தொண்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு மாபெரும் ஆளுமைகளும் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தமிழகத்துக்கு புதுசு. இந்நிலையில் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அர்ரெஸ்ட் எனச் சொல்லப்படும்  இதயத்துடிப்பு முடக்கம்  ஏற்பட்டு உடல் நிலை மோசமானது என அப்போலோ அறிக்கை தந்தது. தமிழகமே பதறியது. மறுநாள் ஜெயலலிதா பற்றிய வதந்திகள் பரவ, முழு நாளும் பதற்றத்தின் உச்சத்திலேயே இருந்தனர் மக்கள். இரவு பதினோரு மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்தார் என மருத்துவர் குழு அறிவிக்க  ஒட்டுமொத்த தமிழக மக்களும் சோகத்தில் மூழ்கினார்கள். அன்றைய இரவே புதிதாக பதவியேற்றது ஓ.பன்னீீர் செல்வம் அமைச்சரவை.

ஓ.பன்னீீர் செல்வம்

 இந்தியாவிலேயே ஒரு தலைவர் இறந்த அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பதவியேற்ற கூத்து தமிழகத்தில் நடந்தது. இந்த நிகழ்வுகளால் மக்கள் குழப்பம் அடைந்தார்கள்.

மறுநாள் மெரினாவில் நடந்த ஜெ. அடக்கத்துக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். ஓ.பன்னீீர் செல்வம் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். அந்தச் சூழ்நிலையில் ஜெ உடலுக்கு அரண் அமைத்து நின்ற மன்னார்குடி குடும்பத்தால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தார்கள். ஜெயலலிதாவுக்கு கால்களை எடுத்து விட்டார்கள், எம்பால்மிங் செய்து விட்டார்கள் என பல  சர்ச்சைகள் கிளம்பின. சமூக வலைத்தளங்களில் ஜெயலலிதா மரணத்துக்கு உண்மை காரணம்  தெரிய வேண்டும் என பலர் பதிவிட்டார்கள். ஜெ மரணம் குறித்த சர்ச்சை  ஓய்வதற்குள்   டிசம்பர் 11, 12 தினங்களில்  வர்தா புயல் சென்னையை காலி செய்தது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையை வைத்துச் செய்தது  இந்த புயல். பண மதிப்பு நீக்கம், மின்சார துண்டிப்பு, வர்தா புயல் பாதிப்பு என அத்தனையும் ஒன்று சேர கண்ணீர் சிந்தினர் சென்னை மக்கள். ஓ.பன்னீீர் செல்வம் தலைமையிலான அரசின்  சுறுசுறுப்பான நடவடிக்கைகளால் சற்று விரைவாகவே இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்தது சென்னை.  டிசம்பர் 21 ஆண்டு  காலையில் ராம் மோகன ராவ் வீட்டில் அதிரடி  ரெய்டு நடத்தியது வருமான வரித்துறை. அரசின் தலைமை செயலாளர் ஒருவரது வீட்டில் ரெய்டு நடத்தியதும், தலைமை செயலகத்துக்குள்ளேயே வருமான வரித்துறை நுழைந்ததும் அகில இந்திய அளவில் ஓ.பன்னீீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசின் மான மரியாதை சரிந்தது. இந்த பிரச்னை முடிவதற்குள்ளாகவே திடீரென டிசம்பர் 29 ஆம் தேதி  அதிமுக பொது குழு கூடி சசிகலாவை   பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. 

சசிகலாவின் வரவு மக்களிடைய பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய சூழ்நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதி திடுமென பதவியேற்றார் சசிகலா. அதுவரை சசிகலாவின் குரல் எந்த மீடியவிலும் வெளியானது இல்லை, 25 வருடங்களுக்கும் மேலாக சசிகலாவின் குரலை கேட்டிராத தமிழர்கள் அன்றைய தினம் அவரின் குரலை கேட்டனர். சசிகலாவின் தலைமை , ஜெயாவின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் இரண்டையும்  மக்கள் கூர்ந்து கவனித்தனர், நெட்டிஸன்கள் மீம்ஸாக  தெறிக்க விட்டனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்க ஜல்லிக்கட்டு விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கின. 

ஜனவரி 12 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க நேரம் குறித்த சசிகலா பின்னர் ஜகா வாங்கினார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையும், அங்கு போராட்டம் செய்தவர்களை போலீசார் கையாண்ட விதமும் மாணவர்களுக்கு கோபம் கிளப்ப, மெரினாவில் கூடினார்கள் மாணவர்கள். மோடி, ஓ.பன்னீீர் செல்வம் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மெரினா புரட்சி

ஒவ்வொரு நாளும் கூட்டமும், ஆதரவும் பெருகியது. தேசிய ஊடகங்கள் இங்கேயே வந்து லைவ் செய்ய ஆரம்பித்தன. இந்தியா முழுமைக்கும் ஜல்லிக்கட்டு பிரச்னை பரவியது. பீட்டாவை தடை செய்ய கோரியும், ஜல்லிக்கட்டுக்கு  நிரந்தர சட்டம் இயற்ற கோரியும் போராடினர் பொதுமக்கள். இந்தியாவிலேயே இப்படியொரு ஜனநாயக போராட்டம் நடந்ததில்லை என தேசமே நெகிழ்ந்தது. போராட்டக்களம், மக்கள் திரளால் விழா கோலம் பூண்டது. அரசுக்கு எதிராக அதிருப்தி அதிகரிப்பதை உணர ஆரம்பித்தன அரசு. ஓ.பன்னீீர் செல்வம் பிரதமரை நேரில் பார்த்து தீர்வு கண்டார். "மாநில அரசு , மத்திய அரசின் வழிகாட்டுதலோடு சட்டம் இயற்றும்" என தெரிவித்தார் ஓ.பன்னீீர்செல்வம். ஆனால் போராட்ட களத்தில் இருந்து கலைந்து செல்ல பொதுமக்களும், மாணவர்களும் மறுத்தனர். "எங்களுக்கு கால அவகாசம் வேண்டும்,  நிரந்தர சட்டம் இயற்றிய நகல் வேண்டும்" என்றனர். ஆனால் காக்கி கூடாரம், கறை படிந்த இரும்பு கைகள் கொண்டு அடக்கியது. பல இடங்களில் காவலர்களே சமூக விரோதிகள் போல கல் வீச்சில் ஈடுபட்டதும், வாகனங்களுக்கு தீ வைத்ததும் சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோக்கள் வழியாக மக்களுக்குத் தெரிந்தது. இதையடுத்து காவலர்கள் மீது பெரும் அதிருப்தியில் இருந்தனர் பொதுமக்கள். 

இதோ ஜனவரி 28 ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகத்தருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மொத, கச்சா எண்ணெய் பல டன் அளவுக்கு கடலில்  கலந்தது. வட சென்னை இளைஞர்கள் துணிந்து இறங்கி வாளியில் எண்ணையை அள்ளினர். சமூக வலைதளங்களில் ஏற்பட்ட விழிப்புணர்வால் பின்னர் அரசாங்கமும்  கை கோர்த்தது, இந்நிலையில் எம்.எம்.ஆர்  தடுப்பூசி குறித்த  வாட்ஸ் அப் பிரச்சாரங்களும் மக்களை பீதியூட்டின. இது குறித்து பல்வேறு மருத்துவ   நிபுணர்களும்  தங்களது நிலைப்பாடுகளை தெரிவித்து வருகிறார்கள். 

அந்த பிரச்னை ஓய்வதற்குள் கடந்த ஞாயிறு அன்று சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாக மீண்டும் இன்னொரு முதல்வரா என நொந்தனர் தமிழக மக்கள்.

ஓ.பன்னீீர் செல்வம்

இந்நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க் கிழமை) இரவு ஜெயலலிதா  சமாதி அருகே தியானம் செய்து, அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பதவியை விட்டு விலகிய காரணத்தைச் சொன்னார். ஓ.பன்னீீர்செல்வம் கொடுத்த அந்த ஒரு பேட்டி இந்திய அளவில் வைரலானது. அவருக்கு ஏகோபித்த ஆதரவு குவிந்தது, சில மணிநேரங்களிலேயே முதன் முறையாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த சசிகலா அவர்கள், ஓ.பி.எஸ்க்கு பின்னால் திமுக இருப்பதாக குற்றம் சாட்டினார். அவருக்கு நள்ளிரவிலேயே பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் சொன்னார் ஓ.பன்னீீர் செல்வம்

நேற்றைய தினம் முதல் சசிகலாவும், ஓ.பன்னீீர்செல்வமும்  தங்கள் நிலைப்பாடுகளை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றார்கள். இதனால் தமிழக அரசியல் சூழலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என திக் திக் சஸ்பென்ஸ் நிலவுகிறது.  

இந்த சஸ்பென்ஸ்கள், த்ரில்லர் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி பதற்றத்திலேயே எந்நேரமும் இருப்பதற்காகவா மக்கள் ஒட்டுப் போட்டார்கள்? விவசாயிகள் தற்கொலை , வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி அதிகரிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு, இந்த ஆண்டு வர இருக்கும் வறட்சி, நீட் தேர்வு, நந்தினி கொலை.. இதோ நேற்று ஹாசினி கொலை என நாம் இந்தச் சூழ்நிலையில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் வாழ்வாதாரப் பிரச்னைகளையும், சமூக அச்சுறுத்தல்களையும் பற்றிப் பேச வாய்ப்பே இல்லாமல் கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு பிரச்சனைகள் மக்களை சூழ்ந்துள்ளன. ஒரு இரவை நிம்மதியாக தூங்கி எழ முடியமா, தூங்கி எழுந்தால் என்ன மாற்றம் நடந்திருக்கும் என சந்தேகக் கண்ணோடு தான் பொதுமக்கள் உழைத்துக் களைத்து கண்ணயரச் செல்கிறார்கள்.  வளர்ச்சி என்பதை விட அத்தியாவசிய தேவைகள் என்பது அதிமுக்கியமானது. இப்போது அதற்கே மக்கள் அல்லாடுகிறார்கள். ஒரு பிரச்னையை பற்றி மக்கள் பேசுவதை தடுக்க வேண்டுமா இன்னொரு பிரச்னையை கிளப்பிவிடு என்ற யுக்தியை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தொடர்ந்து கடைபிடித்தால் ஒருநாள் சாமானியன் எனும் சாதுவும்  மிரள்வான்!