ஆளுங்கட்சி ஆதரவுடன் கோவையில் லாட்டரி பிஸ்னஸ்: 3 பேர் கைது

கோவை பேரூர் பகுதி, ஒரு நம்பர் லாட்டரிக்கும் புகழ் பெற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது. பேரூர் சிவாஜி நகர் அருகே, ஒரு நாளைக்கு பத்து முறை குலுக்கல் நடைபெறுவதாகவும், 11 மணிக்கு தொடங்கும் குலுக்கல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என 11 மணிமுதல் இரவு 7.30 மணி வரை  நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த குலுக்கலில் 3 மணிக்கு கேரளா லாட்டரி ரிசல்ட்டை ஒட்டி நடைபெற்று வருகிறது. அன்றைய குலுக்கலில் முதல் பரிசு விழும் லாட்டரியின் கடைசி மூன்று எண்கள் வைத்து,  ஒரு நம்பர் லாட்டரி விளையாடுவர். இதற்கு, 25,000 ரூபாய் பரிசாக கொடுக்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்களின் முடிவுகள்  இணையத்தில் வந்துவிடும். இதில் ஸ்கை மற்றும் ஸ்டார் என்ற பெயரில் தினமும் குலுக்கல் நடைபெற்று வருகிறது. ஸ்கை குலுக்கலுக்கு 26,000 ரூபாயும், ஸ்டார் குலுக்கலுக்கு 27,000 ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது.

இங்கு வருபவர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களால் கண்காணிக்கப்படுகின்றனர். அங்குள்ள மூன்று வீடுகளில் வைத்து கேரள லாட்டரி தவிர, மற்ற 9 குலுக்கலுக்கான டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. அங்கு 11 மணிக்கு தொடங்கும் போட்டியிலிருந்து, இரவு 7.30  மணி வரை நடைபெறும் போட்டிகளின் முடிவுகளின் அட்டவணை தொங்கவிடப்பட்டுள்ளன.

இதேபோல கோவை மாவட்டத்தில் அன்னூர் மற்றும் கருமத்தம்பட்டி, சோமனூர், பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படும் ஒரு நம்பர் லாட்டரி விளையாட்டால் ஒரு நாளைக்கு, ஒரு கோடி ரூபாய்க்குமேல் வருமானம் வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆளும் கட்சியினரின் ஆதரவோடு அம்மா படத்தை போட்டு நடத்தப்படும் இந்த ஒரு நம்பர் லாட்டரி போட்டிகள் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, பேரூர் காவல்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.