விவசாயம் பாதிக்கக் கூடாது ஓகே... ஆனால் கையகப்படுத்துவதே விவசாய நிலங்களைதானே சார்!

சென்னை: விவசாய நிலங்களை பாதிக்கப்படாமல் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்று கூறுகிறார் ரஜினி. அப்படியானால் சாலை நல்லது என்று கூறுவதற்கு முன்பு விவசாய நிலங்களுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக நிலங்களை மார்க் செய்வதை கண்டித்து விட்டுத்தானே சாலைகள் நல்லது என்று அவர் பேச வேண்டும்.

தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சாலையானது சென்னை சேலம் இடையே அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்துக்கு இடைஞ்சலாக உள்ள வீடு, விவசாய நிலங்கள் என அரசு கையகப்படுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இதுபோன்ற பிரமாண்ட சாலைகள் வரப் போகுதாம்.

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்காகத்தான் சாலையே, ஆனால் அந்த சாலையே வேண்டாம் என்று கூறும் பொதுமக்களின் நியாயத்தை காது கொடுத்து அரசு கேட்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன.

சமூக ஆர்வலர்கள்

இதற்காக போராட்டம் நடத்தி 90-க்கும் மேற்பட்டோர் சிறை சென்றனர். எனவே பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான திட்டங்கள் வேண்டாம் என்றும் அதற்கு பதில் மாற்று திட்டங்களை செயல்படுத்தலாம் என்றும் எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால் போலீஸார் மூலம் போராட்டங்கள் கலைக்கப்படுகின்றன.

ரஜினி பரபர பேச்சு

பாஜக, அதிமுகவை தவிர்த்து தமிழகமே எதிர்த்து வரும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் 8 வழிச்சாலை திட்டங்களால் நாடு முன்னேறும். தொழில் பெருகும். வேலைவாய்ப்புகளும் பெருகும். எனவே எனது ஆதரவு இந்த திட்டத்துக்கு உண்டு.

செயல்படுத்த வேண்டும்

இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு உரிய இழப்பீட்டையோ அல்லது நிலத்தையோ அரசு வழங்க வேண்டும். பெரும்பாலும் விவசாய நிலத்தை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

பணம்

விவசாயிகள் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கிறார். அது சரிதான். ஆனால் வழி நெடுகிலும் விவசாய நிலம்தானே இருக்கிறது. அதை கையகப்படுத்ததானே பெரும் பஞ்சாயத்து நடக்கிறது. இதை தெரிந்தும் ரஜினி இப்படி பூசி மெழுகலாமா. விவசாயத்தை அழித்துவிட்டு அவர்கள் எத்தனை பணமும், உதவாத நிலமும் கொடுத்தால் அதை வைத்து கொண்டு என்ன செய்வது.

சரியில்லை

ரஜினிக்கு முதலில் என்ன பிரச்சினை என்ற தெளிவே இல்லை. மேம்போக்காகவே அத்தனை பிரச்சினைகளிலும் இவர் கருத்து சொல்கிறார். இவர் சொல்லும் எந்தக் கருத்துமே மக்களையொட்டி இல்லை. அரசுகள், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானதாகவே இருக்கிறது. அரசுகள், கார்ப்பரேட்டுகளை இவர் கண்டிப்பதே இல்லை. மாறாக மக்கள் மீதுதான் பாய்கிறார்.

இது என்ன படையப்பா படமா

குறைந்தபட்சம் மத்திய அரசை ரஜினி கண்டித்திருக்க வேண்டும். காரணம் அதுதான் சாலை போடுகிறது. ஆனால், படையப்பா படத்தில் வருவது போல, மாப்பிள்ளை இவர்தான். இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது இல்லை என்பது போல் திட்டம் சரிதான், ஆனால் அதை செயல்படுத்தும் விதம் சரியில்லை என்று சொல்கிறார்.

இவர் காமராஜரா கொடுமை!

இவரை அடுத்த காமராஜர் என்று இவரது ரசிகர்களே கூறிக் கொள்கிறார்கள். ஆனால் விவசாயிகள் போராட்டம், நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி என எந்தப் பிரச்சினையிலும் மக்களுடன் நின்று போராடவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், 8 வழிச்சாலை போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கும் பட்டும் படாமல் கருத்து கூறினால் எப்படி சார் காமராஜர் ஆக முடியும்?

இழப்பு

முதலில் களத்திற்கு தனது ஆட்களை அனுப்பட்டும். என்ன நடக்கிறது என்பதை இவரும் போய்ப் பார்க்க வேண்டும். மற்றவர்கள் போகவில்லையா. இவரும் போக வேண்டியதுதானே. சினிமாவில் நடித்துக் கொண்டு பார்ட் டைம் அரசியல் வேலை பார்த்தால் இப்படித்தான் தப்புத் தப்பாக பேச வரும் என்பதை ரஜினி உணராவிட்டாலும் கூட அவருடன் இருப்பவர்கள் உணர்ந்து அவரைத் திருத்துவது ரஜினிக்கு நல்லது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed