பேச்சு சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை... திஷா ரவிவுக்கு ஆதரவாக கிரேட்டா தன்பெர்க் வாய்ஸ்!

Delhi

oi-Rayar A

|

டெல்லி: டெல்லி போராட்டம் தொடர்பான டூல்கிட்டை பகிர்ந்த வழக்கில் சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படையான மனித உரிமைகள் என்று அவர் கூறியுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த 22 வயதான திஷா ரவி கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாதை மாறிய பேரணி

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. டெல்லியே பதற்றமானது. இந்த சம்பவத்துக்கு பிறகு சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலீபா ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

திஷா ரவி கைது

காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி போலீசார், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறுகின்றனர். இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 22 வயதான திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு கைது செய்தனர். டெல்லி போராட்டத்தில் பங்கெடுக்க விரும்புவோர் போராட்டத்தைப் பற்றியும், அதில் தங்களின் பங்களிப்பை எவ்வாறு செய்ய முடியும் என்கிற விளக்கங்களும் அடங்கிய டூல் கிட் உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக குற்றம்சாட்டி திஷா ரவி கைது செய்யப்பட்டார்.

குவியும் கண்டங்கள்

சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா, கிரேட்டா தன்பர்க்கின் ஃப்ரைடேஸ் ஃபார் ஃபியூச்சர் (Fridays For Future) என்ற அமைப்பின் கிளையை இந்தியாவில் தொடங்கியவர் ஆவார். டெல்லி போலீசார் .சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா ரவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவருக்கு மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் விதித்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். திஷா ரவி கைதுக்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்து வருகிறது. சமூக அக்கறையாளர்கள், சமூக நலப் போராளிகள் மீது அரசு அடக்குமுறையை செலுத்துவதாக எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது.

கிரேட்டா தன்பெர்க் ஆதரவு

இந்த நிலையில் சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் திஷா ரவிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பேச்சு சுதந்திரம், அமைதியான எதிர்ப்பு மற்றும் சட்டசபை உரிமை ஆகியவை அடிப்படையான மனித உரிமைகள். இவை எந்தவொரு ஜனநாயகத்தின் அடிப்படை பகுதியாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed