மீண்டும் மோடி... பலன் தந்த இந்தி பேசும் மாநிலங்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (23/05/2019)

கடைசி தொடர்பு:11:26 (23/05/2019)

உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. மக்களவைத் தேர்தல் முன்னிலை நிலவரம், மீண்டும் மோடி ஆட்சி என்பதை உறுதி செய்திருக்கின்றன. 2019 தேர்தல் முடிவுகளைப் போலவே இந்தி பேசும் மாநிலங்களே பா.ஜ.க கூட்டணிக்கு உறுதுணையாக இருந்திருப்பது தெரியவருகிறது.  
ஆரம்பம் முதலே பா.ஜ.க கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. வேலூர் தவிர்த்து தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில், பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைக் கைப்பற்றுவது தெளிவாகத் தெரிகிறது.  

ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை எனும் நிலையில், முற்பகல் நிலவரப்படி, பா.ஜ.க கூட்டணி 320-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. முந்தைய தேர்தலைக் காட்டிலும் ஓரளவு எழுச்சி பெற்றிருந்தாலும், காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது, ஆட்சி அமைக்கப் போதுமான நம்பர் இல்லை என்பது தெள்ளத் தெளிவு. இதரக் கட்சிகள் 110 இடங்கள் என்ற அளவில் முன்னிலை வகித்துள்ளன. கடந்த தேர்தலைப் போலவே பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைய, பெரும்பாலும் இந்தி பேசும் மாநிலங்களே மிகவும் உறுதுணையாக இருந்திருப்பது தெரிய வருகிறது.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில், கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜ.கவுக்குக் கணிசமான இடங்கள் கிடைக்கும் நிலையில் உள்ளன. சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், பிகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இம்முறை பா.ஜ.கவுக்கு உறுதுணைபுரிந்துள்ளன. நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிப்பதில், அதிக பங்கு செலுத்தக் கூடிய அளவில் 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் இம்முறை பா.ஜ.கவுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டது.

இதற்கு, மாயாவதி அகிலேஷ் `மகா கூட்டணி கடும் சவால் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டதே காரணம். ஆனால், உத்தரப் பிரதேசத்திலும் பா.ஜ.க கூட்டணி 50-க்கும் மேற்பட்ட இடங்களை உறுதி செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க கூட்டணிக்கு மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்த மாநிலத்திலும் 15 இடங்களில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 23 இடங்களை கைப்பற்றக் கூடும். 

பொருளாதார வளர்ச்சியில் தொய்வு, விவசாயிகள் பிரச்னை, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட மக்களின் மேம்பாடு சார்ந்த விஷயங்களில் மோடி ஆட்சி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. குறிப்பாக, வலது சாரி அமைப்புகளின் வெறுப்பரசியல் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின. அதேவேளையில் தேசியவாதத்தையும் தேசப் பாதுகாப்பையும் முன்னிறுத்தி பா.ஜ.க பிரசாரம் செய்தது கவனிக்கத்தக்கது. இதனிடையே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும், வாக்கு எந்திரங்கள் மீதான நம்பிக்கையும் சந்தேகத்துக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகம், புதுவையைப் பொறுத்தவரையில், தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளன. 22 தமிழகச் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில், தி.மு.கவுக்கும் அ.தி.மு.க வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தி.மு.க 12 இடங்களிலும் அ.தி.மு.க 10 இடங்களிலும் முன்னிலை வகித்துள்ளன. மத்தியில் மீண்டும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி என்ற சூழல் காரணமாகவும், இடைத்தேர்தல்களில் 10 இடங்கள் முன்னிலை என்பதாலும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க