கொட்டும் மழையிலும் காவேரி மருத்துவமனையில் குவியும் திமுக தொண்டர்கள்.. பதற்றம்

சென்னை: காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று நள்ளிரவு ரத்த அழுத்தம் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் விசாரித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் கருணாநிதியை அவர் நேரில் சந்தித்தார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாயின. கருணாநிதியில் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

கருணாநிதியின் இதயதுடிப்பு உள்ளிட்டவையும் நார்மலாகவே இருந்தது. இந்நிலையில் நேற்று முதலே திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.

இன்று மாலை முதலே அதிகளவில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தற்போதும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் ஏராளமான அளவில் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சற்றுநேரத்தில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் தொண்டர்கள் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed