காவேரியில் கருணாநிதி அனுமதி இரவில் முடிவு....அதிகாலை பயணம்!

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குத் தொண்டையில் பொருத்தபட்டுள்ள டிராக்கோஸ்டமி கருவியை மாற்றுவதற்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், லண்டனிலிருந்து இன்றுகாலை சென்னைத் திரும்பியதும் கருணாநிதியின் மருத்துவமனை அனுமதிக்கான முடிவு அதிரடியாகத் திட்டமிடப்படுள்ளது. உடல் நலக்குறைவால் கடந்த 2016-ம் ஆண்டு கருணாநிதி, முதல்முறையாக காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அவருக்குத் தொண்டைக்குழி (டிராக்கோஸ்டமி) அறுவை சிகிச்சை அப்போது மேற்கொள்ளபட்டது. அதன்பிறகு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் கருணாநிதி. 

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தினமும் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகிறார்கள். தொண்டையில் பொருத்தப்படும் டிரக்கோஸ்டமி கருவியைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டியது அவசியம். இல்லையென்றால் அந்தக் கருவி மூலம் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உருவாகும். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருணாநிதி, மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரின் டிராக்கோஸ்டமி கருவி மாற்றப்பட்டது.

அதன்பிறகு, தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. அதையடுத்து, தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு அவர் இரண்டுமுறை சென்று வந்தார். சி.ஐ.டி காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கும், கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசுவின் வீட்டுக்கும் கருணாநிதியை உறவினர்கள் அழைத்துச் சென்றார்கள். இந்த நிலையில் கருணாநிதியை தினமும் பரிசோதித்து வரும் டாக்டர்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு `டிராக்கோஸ்டமி கருவியை மீண்டும் மாற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். ஆனால், மு.க. ஸ்டாலின், கடந்த சில தினங்களுக்கு முன் லண்டன் பயணம் மேற்கொண்டிருந்தார். இதனால், ஸ்டாலின் லண்டனிலிருந்து திரும்பியதும், கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, கருணாநிதிக்கு வழக்கமான சிசிக்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு லண்டனிலிருந்து ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாநிதி மகள் செல்வியிடம் பேசியுள்ளார். ``இன்று காலை கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்" என்று அப்போது ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்தத் தகவல் செல்வி மூலமாக கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. `தி.மு.க-வினர் யாரிடமும் கருணாநிதி அனுமதிக்கப்படுவது பற்றி முன்னரே தெரிவிக்க வேண்டாம் என்று அவருடைய குடும்பத்தினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, ஸ்டாலின் சென்னை வந்ததும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு இன்று காலை வந்தார். அங்கு செல்வி, உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தயாராக இருந்தனர். அதன்பின்னர் உடனடியாக கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான வேலைகள் நடந்தேறின. 

கோபாலபுரத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதியை மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் மருத்துவர்கள் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான மயக்க மருந்துகொடுக்கப்பட்டு, நான்காவது தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குக்கு கொண்டு சென்றனர். டாக்டர் மோகன் காமேஸ்வரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்தனர். நண்பகல்வாக்கில் அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர். தொண்டையில் டிராக்கோஸ்டமி கருவி மட்டுமே மாற்றும் சிகிச்சை என்பதால், இன்றிரவே கருணாநிதி, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் மு.க. ஸ்டாலின், கனிமொழி, ராசாத்தியம்மாள், செல்வி, மு.க. தமிழரசு, முரசொலி செல்வம் உள்ளிட்டோருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் பூச்சிமுருகன் ஆகியோரும் இருந்துள்ளார்கள். கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் காவேரி மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், கட்சியினர் அனைவரையும் கீழ்தளத்திலேயே இருக்கும்படி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் அனைவரும் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருத்தனர்.