சதுப்புநிலக் காடுகளுக்கு இடையே ஜாலியா படகு சவாரி... பிச்சாவரம் போயிருக்கிங்களா

வெளியிடப்பட்ட நேரம்: 08:53 (23/02/2019)

கடைசி தொடர்பு:08:55 (23/02/2019)

பிச்சாவரத்தின் சிறு, சிறு தீவுக்கூடங்கள், 6 கிலோ மீட்டர் நீளமுள்ள எழில்மிகு கடற்கரை, பரந்துவிரிந்த அடர்த்தியான மாங்குரோவ் மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளைக்கொண்ட அலையாத்திக் காடுகளின் ஊடே நீண்டநேரம் படகுப் பயணம் மேற்கொள்வது வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

டலூர் மாவட்டத்தில், சிதம்பரம் அருகே உள்ளது பிச்சாவாரம். முன்பு `பித்தர்புரம் என்று அழைக்கப்பட்டது. அது மருவி  தற்போது `பிச்சாவரம் என அழைக்கப்படுகிறது. வங்கக்கடலையொட்டிய இந்தப் பகுதியில் சதுப்புநிலக் காடுகள், மாங்குரோவ் காடுகள்,  அலையாத்திக் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள் அதிகம். இந்தத் தில்லை மரங்களே சிதம்பரம் நடராஜர் கோயிலில் தல மரமாகத் திகழ்கிறது. இந்தக் காடுகள், முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரை வளர்ந்திருந்தன.

பிரேசில் நாட்டில் 26,000 சதுர கிலோமீட்டரில் அலையாத்திக் காடுகள் உள்ளன. அடுத்தபடியாக, பிச்சாவரம் பகுதியில்தான் அதிக சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. பிச்சாவரம் காட்டுப் பகுதியின் பரப்பளவு, 2,800 ஏக்கர். இந்தப் பகுதி சிறு, சிறு தீவுகள் நிறைந்தது. இந்தக் காடுகளில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவையினங்கள் உள்ளன. இது, தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.

இந்தக் காடுகளில் உள்ள செடிகளும், குறுமரங்களும், கடல்நீருக்கு உள்ளேயே வளரும் தன்மைவாய்ந்தவை. இவற்றின் தண்டுகளிலும் கிளைகளிலும் உள்ள துளைகளின் வழியாக உயிர்க்காற்றை உறிஞ்சுகிறது. கடல்நீரில் உள்ள உப்புத்தன்மையை வடிகட்டியே நீரை எடுத்துக்கொள்கிறது. கடலின் நீர் மட்டம் உயரும்போது சிறிய சூழல்களை வெளியே நீட்டி காற்றை உறிஞ்சுகின்றன. பிச்சாவரம் அலையாத்திக் காடுகளின் வடக்கு எல்லையில் வெள்ளார் ஆறும், தெற்கு எல்லையில் கொள்ளிடம் ஆறும் பாய்கின்றன. இந்த ஆறுகள், அலையாத்திக் காடுகள் இருப்பதன் காரணமாக அலைகள் எழாத உப்பங்கழி ஓடையாக மாறி, படகுப் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைந்துள்ளன.

பிச்சாவரத்தின் சிறு, சிறு தீவுக்கூடங்கள், 6 கிலோ மீட்டர் நீளமுள்ள எழில்மிகு கடற்கரை, பரந்துவிரிந்த அடர்த்தியான மாங்குரோவ் மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகளைக்கொண்ட அலையாத்திக் காடுகளின் ஊடே நீண்டநேரம் படகுப் பயணம் மேற்கொள்வது வித்தியாசமான அனுபவத்தைத் தரும். இந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் கால்வாய்களை, படகுகள் மூலம் சென்று பார்க்க வனத்துறை, சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்துவருகின்றனர். 

கோடை விடுமுறை வரவிருக்கிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு  ஊட்டியாகவும் கொடைக்கானலாகவும் இந்தப் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. கடல்நீரில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் படகுச் சவாரி செய்யும்போது வெயிலின் தாக்கம் அதிகம் தெரிவதில்லை. 

பிச்சாவரம் எப்படிச் செல்வது?

சென்னையிலிருந்து பிச்சாவரம் 228 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பயணம் 5 மணி நேரம். கிழக்குக் கடற்கரை சாலை வழியாகச் செல்லலாம். சிதம்பரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் வழியாகச் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச் சாலையின் வழியாகச் செல்லலாம். ரயிலில் வந்தால் சிதம்பரத்தில் இறங்கி பஸ்ஸில் செல்ல வேண்டும்.  சிதம்பரத்திலிருந்து பிச்சாரவத்துக்கு அதிக பஸ் போக்குவரத்து உள்ளது. 

படகுக் கட்டணம்

இங்கு மோட்டார் படகு 13 மற்றும் துடுப்புப் படகு 38 என மொத்தம் 51 படகுகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இயக்கப்படுகின்றன. இதில் மோட்டார் படகில் 8 பேர் வரை செல்லலாம். இதற்கு 1,300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 6 பேர் வரை செல்லும் துடுப்புப் படகில் 340 ரூபாய் முதல் வசூல் செய்யப்படுகிறது. இது இல்லாமல் வனத்துறை சார்பிலும் படகுகள் இயக்கப்படுகின்றன. 

எங்குத் தங்குவது?

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் தனியார் விடுதி, பிச்சாவரத்தில் உள்ளது. அருகில் உள்ள சிதம்பரத்தில் தங்கியும் செல்லலாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க