கொரோனா.. மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆனாலும் குணமடைந்த 1 லட்சம் பேர்.. எப்படி நடந்தது தெரியுமா

Chennai

oi-Shyamsundar I

|

சென்னை: கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமலே 1 லட்சம் பேர் வரை உலகம் முழுக்க குணப்படுத்தப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுக்க இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் குறிக்கோள் இப்போது ஒன்றுதான்.. கொரோனாவை குணப்படுத்துவது அல்லது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது. அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், ரஷ்யா, சீனா, இந்தியா என்று உலக நாடுகள் எல்லாம் கொரோனாவிற்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது.

அமெரிக்கா இது தொடர்பாக மருந்து ஒன்றை சோதனை செய்துள்ளது. ஆனால் எந்த நாடும் கொரோனாவிற்கு முழுமையாக இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.

எந்த மருந்தை பரிந்துரை செய்கிறார்கள்

கொரோனாவிற்கு எதிராக சில நாடுகளில் எச்ஐவி மருந்து கொடுத்து சோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் அது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. அதேபோல் எபோலவிற்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகளும் இதற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் கூட பெரிய அளவில் கொரோனாவிற்கு எதிராக செயலாற்றவில்லை. அதேபோல் தற்போது கொரோனாவிற்கு எதிராக குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.

மலேரியா மருந்து

குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்பது மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மருந்து வகைகள் ஆகும். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. அதுவும் மிகவும் தீவிரமான, மோசமான உடல்நிலையில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த குளோரோகுய்ன் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்படுகிறது. மிக மிக குறைவான அளவில் மட்டுமே இதை பயன்படுத்த அறிவுரை செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக செயலாற்றவில்லை

இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்தாது. கொரோனா வைரஸ், மனித உடம்பில் இருக்கும் வைரஸ் போலவே வேடம் அணிந்து நமது எதிர்ப்பு சக்தி அளிக்கும் செல்களை குழப்பும். இதனால்தான் இந்த கொரோனாவை கொல்வது கடினமாக இருக்கிறது. மலேரியாவும் இதேபோல்தான் செயல்படும். அதனால்தான் இரண்டுக்கும் ஒரே மருந்தினை பரிந்துரை செய்கிறார்கள்.இந்த மருந்து, கொரோனாவின் இந்த செயல் திறனை குறைக்கும்.

ஆனால் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை

ஆனால் கொரோனாவிற்கு இன்னும் முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவிற்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படமால் அதற்கு எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்று கேள்வி எழலாம். கொரோனா காரணமாக உலகம் முழுக்க 18,957 பேர் பலியாகி உள்ளனர். 425,959 பேர் கொரோனா மூலம் உலகம் முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 109,241 பேர் இதில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார்கள்.

எப்படி மீண்டனர்

ஆம் இந்த 109,241 பேரை குணப்படுத்தினார்கள் என்று கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த 1 லட்சம் பேரை குணப்படுத்தினார்கள் என்று கூறுவதை விட இவர்கள் மீண்டு வந்து இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இவர்களுக்கு கொரோனாவை குணப்படுத்தவில்லை. அது ஏற்படுத்தும் விளைவுகளை மருந்து கொடுத்து கட்டுப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் மறைமுகமாக கொரோனாவை செயலிழக்க செய்துள்ளனர்.

எப்படி செயல் இழக்க செய்வது

கொரோனா வந்தால் இருமல் ஏற்படும், நெஞ்சு வலிக்கும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இது மிகவும் கடினமானதாக இருக்கும். இதற்கு மட்டும்தான் மருந்து அளிக்கிறார்கள். இந்த விளைவுகளை கட்டுப்படுத்தி, கொரோனாவை கட்டுப்படுத்துகிறார்கள். சரியாக சொல்ல வேண்டும் என்றால், கொரோனா ஏற்படுத்திய தாக்கங்களை கட்டுப்படுத்தி, மொத்தமாக அதை நிர்மூலமாக்கி, அதை தோல்வி அடைய செய்கிறார்கள்.

இப்போது ஒரே வழி

இதனால் கொரோனா வந்து மீண்டவர்களை குணப்படுத்தப்பட்டார்கள் என்று சொல்ல முடியாது. அதன் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவ்வளவுதான். இதன் மூலம்தான் தற்போது 1 லட்சம் பேர் வரை உலகம் முழுக்க மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொரோனாவிற்கு முழுமையான மருந்து கண்டுபிடிக்கும் வரை உலகம் முழுக்க இதே சிகிச்சை முறைகள்தான் தொடரும்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed