கொரோனா.. பெங்களூரை கைவிட்ட கர்நாடக அரசு மருத்துவ வழிகாட்டலுக்கு கூட ஆளில்லை.. கடும் பீதியில் மக்கள்

Bangalore

oi-Veerakumar

|

பெங்களூர்: கொரோனா வைரஸ் பரவல் பெங்களூரில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு எந்த ஒரு உதவியும் செய்வது கிடையாது என்றும், காய்ச்சல் மருந்துக்குக்கூட பெங்களூரில் தட்டுப்பாடு நிலவுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆம்.. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதாக சில வாரங்கள் முன்பு வரை புகழப்பட்ட பெங்களூர் நிலைமை தான் இது.

கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப காலகட்டங்களில், நோயாளிகள் அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தது கர்நாடக அரசு. ஆனால், இப்போது அறிகுறி இல்லாத நோயாளிகள் மற்றும் இளம் வயது நோயாளிகளை வீட்டில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை செய்து அனுப்பி விடுகின்றனர்.

அதிகரிக்கும் கொரோனா.. என்ன செய்வதென புரியாமல் கைவிட்ட பெங்களூர் மாநகராட்சி.. சென்னை எவ்வளவோ பெட்டர்

வீட்டு கண்காணிப்பு

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இருப்பதை உறுதி செய்வதற்காக, இது போன்ற நடவடிக்கை எடுப்பது, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் பின்பற்றப்பட கூடியதுதான். சென்னை உட்பட தமிழகத்திலும்கூட இவ்வாறான நடைமுறை உள்ளது. ஆனால் பெங்களூர் சொதப்புவது வீட்டு தனிமையில் இருப்போருக்கு வழங்கப்படும் கவனிப்பு மற்றும் சிகிச்சை போன்ற விஷயங்களில்தான். இங்கு தான் சென்னையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெங்களூர்.

போன் கூட கிடையாது

விவி புரம் பகுதியை சேர்ந்த ஒருவர் இதுபற்றி கூறுகையில் ஜூலை 26ஆம் தேதி அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் கிடைக்கப் பெற்றதாகவும் அதன்பிறகு வீட்டு தனிமையில் இருந்த போதிலும் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் யாருமே தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்கள் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார். மருத்துவ வழிகாட்டுதல் இல்லாத நிலையில், அவரது மகன் மருந்தகத்தில் இருந்து பாராசிட்டமால் மாத்திரை வாங்கி கொடுப்பதாக கூறப்படுகிறது.

16,000 பேர் வீட்டு தனிமை

தற்போது பெங்களூரில் சுமார் 16,000 கொரோனா நோயாளிகள் வீட்டு தனிமையில் உள்ளனர். ஆனால், பெங்களூர் மாநகராட்சி அவர்களுக்குத் தேவைப்படும் மருந்துகளை வினியோகம் செய்வதில் தோல்வி அடைந்துள்ளது. "நிறுவன தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் ஹோட்டல் அறைகள் அல்லது சிகிச்சை மையங்களில் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டபோது உரிய வகையில் மருந்து சப்ளை செய்ய முடிந்தது. ஆனால் வீட்டு தனிமையில் இருப்போருக்கு அதை செய்ய எங்களால் முடியவில்லை" என்கிறார், சுகாதாரத் துறையின் ஒரு மூத்த அதிகாரி.

மாத்திரை பற்றாக்குறை

பாராசிட்டமால் மருந்துகள், கொரோனா மட்டுமின்றி, பிற காய்ச்சல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் தேவைப்படுவதால், பெங்களூர் நகரில் இந்த மாத்திரைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. பெங்களூர் மாநகராட்சியின் கால்சென்டரில் 26 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 2,000 நோயாளிகளுடன் தொடர்பு கொள்கிறார்கள். மற்றவர்கள் அந்தரத்தில் விடப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான மருத்துவ வழிகாட்டுதல்கள், மருந்து விநியோகம் கிடையாது.

அச்சப்படும் அதிகாரிகள்

வீட்டு தனிமையில் இருப்பவர்களை கண்காணிப்பதற்காக, 20,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது போதிய அளவு கிடையாது என்பதே யதார்த்தம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றுவதற்கு பயப்பட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். இதனால் கையறு நிலையில் உள்ளனர் மக்கள்.

கொரோனா சிகிச்சை கிட்

பெங்களூர் மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு கொரோனா கிட் வழங்குவதற்கு தனியார் அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் இதுவரை எந்த ஒரு நோயாளிக்கும் இந்த உபகரணம் சென்று சேரவில்லை. இந்த உபகரண பெட்டகத்தில், பல்ஸ் ஆக்சிமீட்டர், தெர்மாமீட்டர் மற்றும் மருந்துகள் அடங்கி இருக்கும் என்று ஏட்டளவில் மட்டுமே அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. வீட்டு தனிமையில் இருப்பவர்கள் எல்லாம் தாங்களாக உறவினர்கள் மூலமாக மருந்து வாங்கிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நிதி ஒதுக்கீடு இல்லை

சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், ஒவ்வொரு வார்டுக்கும் தலா 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து இந்த உபகரணத்தை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை மொத்தம் உள்ள 198 வார்டுகளில் 50 வார்டுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் எந்த ஒரு திட்டமிடலும் இல்லை, களத்தில் அதிகாரிகளும் ஊழியர்களும் இல்லை. கொரோனா நோயாளிகள் அந்தரத்தில் விடப்பட்டுள்ளனர் என்பதுதான் பெங்களூரின் கள எதார்த்தமாக இருக்கிறது.

கர்நாடக அரசின் தோல்வி

கர்நாடக அரசு இந்த விஷயத்தில் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. "இனிமேல் கர்நாடகாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று சில வாரங்கள் முன்பு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு, தெரிவித்தது, இனிமேல் அரசு எதுவும் செய்யப்போவதில்லை.. என்பதற்கான அபாய மணியோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed