என்னாது வீட்டை காலி பண்ண சொல்றாங்களா.. ஹவுஸ்ஓனர்களே ஜாக்கிரதை.. அமித்ஷா விட்ட சுளீர் எச்சரிக்கை

Delhi

oi-Hemavandhana

|

டெல்லி: வீட்டை யாரு காலி பண்ண சொல்றது? கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் டாக்டர்கள், ஊழியர்கள் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி ஓனர்கள் நெருக்கடி தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமித்ஷா எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொற்று வேகமாக பரவி வருகிறது.. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 10 பேர் இறந்துள்ளனர்.

நாடே ஒரு வித பதற்றத்தில் உள்ளது.. இந்த வைரஸை கட்டுப்படுத்த 21 நாட்கள் லாக் டவுன் செய்யப்பட்டும் உள்ளது.. அதே சமயம் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை கண்காணிக்கும் பணியில் டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் இரவுபகலாக ஈடுபட்டு வருகிறார்கள். வீடுகளுக்கும் செல்வது கிடையாது.. இந்த தொற்று தங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்று தெரிந்தும்தான் மருத்துவர்கள் தங்களையே அர்ப்பணித்து வேலை பார்த்து வருகிறார்கள்.

ஆனால் வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுகொண்டிருக்கும் இந்த டாக்டர்களில் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு ஒரு நெருக்கடி வந்துள்ளது.. வாடகை வீட்டில் குடியிருந்தாலோ அல்லது வாடகை இடத்தில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தாலோ, அவர்களை அங்கிருந்து உடனே காலி செய்ய வேண்டும் என்று ஹவுஸ் ஓனர்கள் நெருக்கடி தருகிறார்களாம்.

காரணம், இவர்கள் மூலமாகவும் கொரோனா தங்களுக்கு பரவிவிடும் என்பதால்தான் பயந்து இப்படி நெருக்கடி தந்தனர்.. ஓனர்கள் குடைச்சல் தாங்காமல் சிலர் வீட்டையே காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர். மற்ற மருத்துவ ஊழியர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் நேரடியாக அமித்ஷாவுக்கே கடிதம் எழுதிவிட்டனர். மருத்துவர்கள் சார்பில்தான் இந்த புகார் தெரிவிக்கப்பட்டது.

"வாடகை வீட்டில் குடியிருக்கும் கொரோனா மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், பிற மருத்துவ ஊழியர்களை, கொரோனா பரவும் என்ற அச்சத்தின் காரணமாக வீட்டின் உரிமையாளர்கள் வீட்டைக் காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். பலரை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். பல மருத்துவர்கள் வீடுகளின்றி நடுரோட்டில் நிற்கின்றனர். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து, மருத்துவத்துறை ஊழியர்களை வீட்டைக் காலி செய்ய கட்டாயப்படும் வீட்டு ஓனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமித்ஷா டெல்லி மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கத்துக்கும் போன் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித்ஷா உத்தரவாதம் அளித்துள்ளார்.

இந்நிலையில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தங்கி இருக்கும் வீட்டையோ அல்லது வாடகை இடத்தில் இயங்கும் மருத்துவமனையையோ காலி செய்ய நெருக்கடி தரும் கட்டிட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டல துணை ஆணையர்களுக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed