அதிமுகபாஜக கூட்டணி பற்றி ஓபிஎஸ் சொன்னது இருக்கட்டும்.. எடப்பாடியார் போட்டாரு பாருங்க ஒரே போடு

Chennai

oi-Veerakumar

|

சென்னை: வல்லரசு நாடுகளே பாராட்டும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த அதிமுக கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இதில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் அமித்ஷா. மேலும் பல திட்டங்களை, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

வல்லரசு நாடுகள் பாராட்டு

பின்னர் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசியதாவது: துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டதைப் போல, இந்திய பிரதமர் இப்போது மிக கடுமையான சோதனை காலத்தில், நாட்டு மக்களின் ஒத்துழைப்போடு, மிகத் திறமையாக வல்லரசு நாடுகள் பாராட்டும் அளவுக்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

அமித் ஷாவுக்கு பாராட்டு

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையாக முயற்சி செய்து வருகிறார் பிரதமர். அவரது முயற்சிக்கு தமிழகம் எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமருக்கு எப்போதும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதுணையாக இருந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெறும் அளவுக்கு வளர்ந்து வரும் காட்சியை நாம் பார்க்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி

நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் எடுத்த முயற்சிதான் வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற காரணம். நாடாளுமன்ற தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். முன்னதாக ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுக மற்றும் பாஜக வெற்றி கூட்டணி தொடரும் என்று அறிவித்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மீண்டும் தொடரும் என்று தெரிவித்துள்ளார். அவர் பாஜக மற்றும் அதிமுக என்று தெரிவிக்க வில்லை.

அதிமுக கூட்டணி

எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் குறிப்பிட்டு கூறியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இன்னும் பிற கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications

You have already subscribed