`இனி அங்கிருந்து பிரயோஜனமில்லை’ தங்க தமிழ்ச்செல்வனைச் சுற்றி நடக்கும் அரசியல் சடுகுடு!

வெளியிடப்பட்ட நேரம்: 17:42 (31/05/2019)

கடைசி தொடர்பு:17:42 (31/05/2019)

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன். ஆனால் கடைசிநேர ட்விஸ்டை அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது இடம் கூட இல்லாமல் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு படுதோல்வியடைந்தார். தேர்தல் நடத்தும் அலுவலரிடம், `எப்படி ஏற்கெனவே வாக்கு எண்ணும் பெட்டி உடைக்கப்பட்டுள்ளது’ என்று சீறினார். ஆனால் அதனால் எந்தப் பயனுமில்லை. எப்படியோ அங்கே ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

இழந்த எம்.எல்.ஏ பதவியை மக்களவை உறுப்பினர் பதவி கொண்டு ஈடுகட்டி விடலாம்’ என்ற அவரது எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது. தினகரனை நம்பி வந்தது, நமக்கு எந்த வகையிலும் சாதகமாக அமையவில்லை என்று எண்ணுகிறார். இதன் எதிரொலியாகத்தான் தஞ்சையில் நிகழ்ந்த அ.ம.மு.க பொருளாளரான ரங்கசாமி திருமணத்தில் வெற்றிவேலோ, தங்க தமிழ்ச்செல்வனோ கலந்துகொள்ளவில்லை.

டி.டி.வி.தினகரன் மட்டும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றியிருந்தார். இப்படியாக விலகியேயிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதிருப்தியில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனை எப்படியாவது தங்கள் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்று இரண்டு திராவிடக்கட்சிகளும் போட்டிப்போடுவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அ.தி.மு.க தரப்பில் விசாரித்த போது, ``மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் இடம்பெறாததில் எடப்பாடி பழனிசாமியின் பங்கும் இருக்கிறது. `ஓ.பி.ஆருக்கு பதவி கொடுத்தால் மற்ற சீனியர்கள் கேள்வி கேட்பார்கள். தேவையில்லாமல் கட்சியில் குழப்பம் ஏற்படும்’ என்று பா.ஜ.க தலைமையிடம் எடப்பாடி கூறியுள்ளார். கேபினட்டில் அவர் பெயர் இல்லாதது, தனக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறார் எடப்பாடி.

தேனியில் ஓ.பி.எஸ் கை ஓங்கியிருக்கிறது, அவரது மகன் வெற்றி பெற்றுள்ளார். ஆக அப்பகுதியில் தனக்குச் சாதகமான பொறுப்பாளராக்கவேண்டும் என்று எண்ணிய அவருக்கு தங்க தமிழ்ச்செல்வன் நல்ல சாய்ஸாக இருக்கிறார். அ.தி.மு.க தரப்பில் எடப்பாடிக்கு நெருக்கமான சிலர் அவரிடம் பேசிவருகின்றனர். `மீண்டும் கழகத்துலயே வந்து இணைஞ்சுடுங்க. உங்களுக்கான பொறுப்புகள் கண்டிப்பா கிடைக்கும். ஒரு பதவியும், பொறுப்பும் இல்லாம எதுக்கு அ.ம.மு.கவுலயே இருக்கீங்க. ராஜ்யசபாவுக்கு கூட முயற்சி பண்ணலாம்’ என்றெல்லாம் பேசியுள்ளனர். ஏற்கெனவே விரக்தியிலிருக்கும் தமிழ்ச்செல்வன், இது தொடர்பாக ஆலோசித்துவருகிறார். `இனி அ.ம.மு.கவிலிருந்து ஒரு பயனுமில்லை’என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்” என்கிறார்கள். தி.மு.க தரப்பில் அ.ம.மு.கவிலிருந்து பிரிந்துவந்த செந்தில் பாலாஜியைக்கொண்டு தங்க தமிழ்ச்செல்வனை உள்ளிழுப்பதற்கான `மூவ்’கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் நாளை சென்னையில் நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெரியவரும் என்கிறார்கள்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க