`அம்மா... அந்த அவகேடோவை கொடுங்க!’ அணில்குட்டிக்கு அம்மாவான இளம்பெண்

வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (18/03/2019)

கடைசி தொடர்பு:10:26 (18/03/2019)

தம்பெலினா மற்ற அணில்களைப்போல் இல்லை. பொதுவாக அணில்கள் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் கண் விழித்துவிடும், காதுகளும் வளர்ந்துவிடும். ஆனால், தம்பெலினாவுக்கு இரண்டும் முழுமையாக வளர ஒன்பது வாரங்கள் ஆனது. அவள் மற்ற அணில்களைப் போன்றவள் இல்லை. மற்றதைப்போல் உயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தாவுவதும் குதிப்பதுமாக இருக்கமாட்டாள். அவள் வழக்கமாகச் செல்லும் ஒரே உயரமான இடம் ஜன்னல் ஓரம் மட்டும்தான்.

ம்மா கிரிஸ்டினா கொடுத்த அவகேடோக்களை அவசர அவசரமாக ஒளித்து வைத்துக்கொண்டிருந்தாள் தம்பெலினா. கறிவேப்பிலைகள் போட்டு வைத்திருந்த டப்பாவுக்குள் இலைகளுக்கு அடியில் ஒளித்து வைத்தாள். தன் தாயின் தலையணைக்கு அடியில், போர்வைக்குள், தன்னுடைய பொம்மைகளுக்குள் என்று ஆங்காங்கே ஒளித்து வைத்துக்கொண்டிருந்தாள்.

``தம்பெலினா! கொஞ்சமாவது சாப்பிடு, கொடுக்கிற எல்லாத்தையும் ஒளிச்சு வைச்சுக்கப்போறியா!’’ என்ற கிரிஸ்டினாவின் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் அவகேடோக்களை ஒளித்து வைப்பதில் முனைந்திருந்தாள். ஒரு அவகேடோவைக் கொடுக்காமல் இழுத்துக் கொண்டேயிருந்த கிரிஸ்டினாவிடமிருந்து அதையும் பிடுங்கி ஒளித்து வைத்தாள் தம்பெலினா. இதுபோன்ற செயல்களின்போது தம்பெலினா தன்னிடம் பேசுவதைப் போன்ற கற்பனைக்குள் கிரிஸ்டினா சென்றுவிடுவாள். இப்போதும் அப்படியே அவள் தன்னிடம் பேசுவதைப் போலிருந்தது, ``அம்மா! அவகேடோவைக் கொடுங்க. ஒளிச்சு வெக்கணும்’’ என்று தனக்குத் தானே நினைத்துக்கொண்டிருந்த கிரிஸ்டினாவுக்கு முதன்முதலில் தம்பெலினா அங்கு வந்து சேர்ந்தது நினைவுக்கு வந்தது.

அன்று மைக்கேல்தான் முதலில் வீட்டுக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து கிரிஸ்டினாவும் நுழைந்தாள். மைக்கேல் மற்றும் கிரிஸ்டினா இருவரும் ஆபத்திலும் ஆதரவற்றும் தவிக்கும் விலங்குகளை மீட்டுச் சிகிச்சையளித்துக் காட்டில் விட்டுவிடுவார்கள். அவர்களுக்குப் புதிது புதிதாக விலங்கினங்களின் குரல்களைக் கேட்பதொன்றும் புதிதில்லை. ஆனால், அன்று அவர்களுடைய வீட்டில் கேட்ட ஓசை புதியதொரு வாழ்வைக் கொடுக்கப்போகிறதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களின் கட்டிலில் ஒரு கூடு கலைந்து கிடந்தது. அதற்குள் அப்போதுதான் பிறந்த இரண்டு அணில் குட்டிகள் இருந்தன. எப்படியோ கூடு கலைந்திருக்க வேண்டும். குட்டிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தாய் அணில் கொண்டுவந்து அங்கே போட்டிருக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தும் வகையில் தாய் அணில் குட்டிகளுக்கு மீண்டும் கூடுகட்டத் தேவையான பொருள்களைச் சேகரித்துக் கொண்டுவந்து வைத்துக்கொண்டிருந்தது. ஆனால், அதற்குத் தகுந்த சூழல் அமையவில்லை.

கிரிஸ்டினாவுக்கும் தாயிடமே குட்டியைச் சேர்த்துவிட வேண்டுமென்றுதான் ஆசை. ஆனால், தாய் அணிலின் நிலை மிக மோசமாக இருந்தது. கூடுகட்ட முடியாத சூழல். அதனால், குட்டிகளுக்குத் தேவையான வெதுவெதுப்பைக் கொடுக்கத் தாய்க்குச் சிரமமாக இருக்கும். 

இருவரும் ஒருவர் பார்த்துக்கொண்டார்கள், ``வேறு வழியில்லை, நாமே கவனித்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என்றாள் கிரிஸ்டினா. மைக்கேலுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. இரண்டையும் நன்றாகத்தான் பராமரித்தார்கள். இருந்தும் இரண்டில் ஒன்றுதான் பிழைத்தது. அதற்கு தம்பெலினா (Thumbelina) என்று பெயர் வைத்தார்கள். 

தம்பெலினா மற்ற அணில்களைப்போல் இல்லை. பொதுவாக அணில்கள் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் கண் விழித்துவிடும், காதுகளும் வளர்ந்துவிடும். ஆனால், தம்பெலினாவுக்கு இரண்டும் முழுமையாக வளர ஒன்பது வாரங்கள் ஆனது. அவள் மற்ற அணில்களைப் போன்றவள் இல்லை. மற்றதைப்போல் உயரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தாவுவதும் குதிப்பதுமாக இருக்கமாட்டாள். அவள் வழக்கமாகச் செல்லும் ஒரே உயரமான இடம் ஜன்னல் ஓரம் மட்டும்தான். தம்பெலினாவுக்கு உயரம் என்றாலே பயம். அவள் அனைத்துக்குமே மிரண்டுவிடுகிறாள். நன்றாக வளர்ந்த பின்னும் அவளைக் காட்டில் விட்டுவிடுவது எளிமையாக இருக்கவில்லை. இருவருமே பயந்தார்கள். அவளால் காட்டில் பிழைத்திருக்க முடியுமா என்ற அச்சம் அவர்களைப் பீடித்திருந்தது. தம்பெலினாவும் அதற்கு ஏற்றாற்போல் சொகுசு வாழ்வையே மிகவும் விரும்பினாள். அதற்குக் காரணமும் இருக்கவே செய்தது. மற்றவற்றைப்போல் அவளைக் காட்டில் விடுவது அவளை மரண வாயிலில் தள்ளுவதற்குச் சமம் என்ற சூழ்நிலை இருந்தது.

தம்பெலினா மற்ற சாதாரண அணில்களைப் போல் இருக்கவில்லை. பிறக்கும்போதே டிராமா (Trauma) என்ற குறைபாட்டோடு பிறந்துவிட்டாள். பொதுவாக அணில்களுக்கு இருக்கும் இயற்கைத் திறன்களும் உள்ளுணர்வுகளும் அவளிடம் இல்லை. எளிதாகத் தாவவும் குதிக்கவும், மரமேறவும் மிகச் சிரமப்பட்டாள். சொல்லப்போனால், அவள் ஓர் அணிலாகவே நடந்து கொள்ளவில்லையோ என்றுதான் மைக்கேலுக்கும் கிரிஸ்டினாவுக்கும் தோன்றியது. தன் விருப்ப உணவான அவகேடோ பழங்களைத் தேடிச் சுற்றுவதையே விரும்பிச் செய்துகொண்டிருப்பாள். அதுவும் அவளுக்குப் பாதுகாப்பாக இருந்த சமையலறையில் மட்டும். அவள் இதுவரை சென்ற ஒரே உயரமான இடம் அவர்களது வீட்டின் ஜன்னல் ஓரம். அதற்குமே பயந்து பதறியடித்துக்கொண்டு படுத்துவிடுவாள். தம்பெலினாவுக்குத் தெரிந்ததெல்லாம் விதைகளைக் கிரிஸ்டினாவின் வாயிலிருந்து எடுத்துச் சாப்பிடுவதும் அவகேடோவைத் தேடிச் சுவைப்பதும், கிரிஸ்டினா செய்துவிடும் மசாஜுக்கு நிம்மதியாகத் தூங்குவதும்தான். கிரிஸ்டினாவும் தன்னைத் தம்பெலினாவுக்குத் தாயாகவே பாவித்து அவளைக் கவனித்துக் கொள்வதையே முழுநேரப் பணியாகச் செய்யத் தொடங்கிவிட்டாள்.

அப்போதுதான் பிறந்த கண்கூட விழிக்காத அணில் குட்டிகளைப் பார்த்துக் கொள்வதொன்றும் அவ்வளவு எளிமையான காரியமில்லை. அதிலும் அது மீண்டும் தன் தாயோடு சேரவே முடியாது, நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமென்னும் சமயத்தில் அது மேலும் கடினமான காரியம். சில மணிநேரங்களுக்கு ஒருமுறை பால் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதேசமயம், தொற்றுகள் ஏற்பட்டுவிடாதவாறு கண்காணித்துக் கொண்டுமிருக்க வேண்டும். ஏனென்றால், அது தனக்கான இயற்கையான சூழலில் இல்லை. மனிதர்களோடு இருக்கிறது. சுண்டுவிரலைவிடச் சின்னதாக இருக்கும் அணில் குட்டிகளைப் பாதுகாத்துப் பராமரித்து அதில் ஒன்றைச் சிறப்பாக வளரவும் வைப்பது நிச்சயம் சாதனைதான். அதை வெகு எளிதாகச் செய்திருக்கிறார்கள் மைக்கேல் மற்றும் கிரிஸ்டினா. அணில் குட்டி தன் 14 வாரங்களை அடைந்ததும், வெளியே சுற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். ஆனால், முற்றிலும் வெளியே விட்டுவிடக்கூடாது. புதிய சூழலுக்குச் சிறிது சிறிதாக தம்பெலினாவைப் பழக்கப்படுத்த நினைத்தார்கள். அந்த முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. தம்பெலினாவுக்கு இவர்களை விட்டால் வேறு எதுவும் தெரியவில்லை. அவள் தெரிந்துகொள்ள விரும்பவுமில்லை. இவர்களுக்கும் வேறு வழியில்லை. அதனால், மைக்கேலும் கிரிஸ்டினாவும் நிரந்தரமாகத் தங்களுடனே வைத்துக்கொள்ளத் தீர்மானித்தார்கள்.

விலங்குகள் மீட்பாளர்களான கிரிஸ்டினா, மைக்கேல் இருவருக்குமே இது சிரமமாகத்தான் இருந்தது. நகரங்களில் இதுபோல் பல்வேறு இடங்களில் அணில் குட்டிகளை மீட்பதற்கு அழைப்பு வரும். அதற்கும் செல்லவேண்டும். தம் குழந்தையான தம்பெலினாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, மீட்கப்படும் அணில்களைச் சில நாட்கள் கண்காணித்துவிட்டுக் காட்டில் விட்டுவிட வேண்டும். அவற்றால் வாழ முடியாத சூழல் இருந்தால் கருணைக்கொலை செய்துவிட வேண்டும். அவற்றை வைத்துப் பராமரித்துக் கொண்டிருப்பது மீட்பவர்களின் வேலையல்ல. இயற்கையாகப் பிழைத்திருக்க வேண்டியவைதான் பிழைத்திருக்கும் என்ற விதியைத்தான் பின்பற்ற வேண்டும். ஆனால், இவர்கள் அதற்குக் கட்டுப்படவில்லை. தம்பெலினா அப்படிப் பிறந்தது அவள் குற்றமில்லையே. அவளும் வாழவேண்டும். அதற்குத் துணைபுரிய நினைத்தார்கள். இன்று டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று அனைத்திலுமே தம்பெலினா பிரபலமானவள். அதற்குக் காரணம் அவளுடைய அம்மா கிரிஸ்டினாவும் அப்பா மைக்கேலும்.

"வெளியே பிழைத்திருக்க முடியாத விலங்குகளை ஒன்று கருணைக்கொலை செய்துவிட வேண்டும், இல்லையென்றால் அவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும். இதைத்தான் இங்குப் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு வேறு வழிகளும் இருப்பதாகத் தோன்றியது. தம்பெலினா வித்தியாசமாகப் பிறந்தது அவள் குற்றமில்லையே! அவளுக்கும் வாழ உரிமையுண்டு"- மைக்கேல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க