ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை : யாருக்கு பாதிப்பும் என்ன பரிகாரமும்

சென்னை: நெருப்பு கிரகமான தனுசு ராசியில் சனியுடன் நெருப்பு கிரகம் செவ்வாய் சேரப்போவது சில இயற்கை பாதிப்பை ஏற்படுத்தும். யுத்த கிரகம் என்று கூறப்படும் செவ்வாயும் அதற்கு பகை கிரகமான சனியும் மார்ச் 11ஆம் தேதி முதல் இராசியில் சஞ்சரிக்கப் போகிறது.

பெருமழையும், வெள்ளமும், தீ விபத்தும் நிலநடுக்கமும், பூகம்பமும் விபத்துகளும் நிகழ்வதில் கிரகங்களின் சேர்க்கை பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடு மிகமிக முக்கியமானது. மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் செவ்வாய் சஞ்சாரம் பற்றியும், செவ்வாய் சனி சேர்க்கை பற்றியும் ஜோதிடர்கள் அதிகம் பேசினர்.

செவ்வாய்க்கு மார்ஸ் என்று பெயர் வைத்ததற்கு காரணம், மார்ஸ் என்பது போர்க்கடவுளின் பெயர். இப்போது செவ்வாய் சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும், அரசு ஊழியர்களின் போராட்டம் இனி அதிகரிக்கும். மின்சாரத் துறை, காவல் துறை பாதிக்கப்படும். அரசியல் கட்சிகள் இடையே வரும் மார்ச் 11ஆம் தேதிமுதல் மோதலும், கட்சிகள் அணி மாறுவதும், சில தீர்ப்புகளால் ஆட்சியில் பாதிப்புகளும் ஏற்படும் என்று கூறுகின்றனர். ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை பெற்றவர்களுக்கு எப்படி என பார்க்கலாம்.

நில அதிர்வு பூகம்பம்

பூமிக்கு அதிபதியான செவ்வாய், நிலஅதிர்வு-பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

செவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி. ஈஸ்வரனையும் விடாததால் சனிஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனி பகவான். பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி. செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருக்கும் போது அவை ஒரு ஜாதகருக்கு எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்துகிறது.

மன உளைச்சல்

லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உளைச்சல் கொடுக்கிறது. லக்கினத்திற்கு 2ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சதா சண்டைதான், எலியும் பூனையுமாக இருப்பார்கள்.

அம்மாவின் உடல் நலம் பாதிப்பு

லக்கினத்திற்கு 3ஆம் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதிக்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைக்கிறது. புகழ், கௌரவம் பாதிக்கும். லக்கினத்திற்கு 4ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் தேவை.

நோய், கடன் பெருகும்

லக்கினத்திற்கு 5ஆம் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் வம்பு வழக்கு ஏற்படும். இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. லக்கினத்திற்கு 6ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவை இல்லாமல் கடன் அதிகரிக்கும். நோய் பிரச்சினை அதிகரித்து அறுவைசிகிச்சை வரை செல்லும்.

அரசு விரோதம் ஏற்படும்

லக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்க்கை, திருமண தடை உண்டாக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறது. கூட்டு தொழிலில் விரோதம் வளரும். வீட்டில் கணவன் அல்லது மனைவிக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. லக்கினத்திற்கு 8ஆம் வீட்டிற்கு செவ்வாய்-சனி இருந்தால் அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும்.

அப்பா உடன் தகராறு

லக்கினத்திற்கு 9ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். தந்தை மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். லக்கினத்திற்கு 10ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும். நிரந்தரமான தொழில் அமையாது.

தூக்கப் பிரச்சினை

லக்கினத்திற்கு 11ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் மூத்த சகோதரருக்கு பிரச்சினை உண்டாக்கும். . ஜாதகருக்கே உடல்நிலை பாதிக்கும். வெளிநாட்டு முயற்சி பாதிப்பை ஏற்படுத்தும். லக்கினத்திற்கு 12ல் செவ்வாய்-சனி இணைந்தால் வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது.

முருகன் விஷ்ணு

செவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு முருகப்பெருமானையும், விநாயகரையும், மகா விஷ்ணுவையும் வணங்க வேண்டும். செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும். ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் யில் பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெறsubscribe to Tamil Oneindia.